ஒன்பதாவது முறையாக மத்திய பட் ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பல்வேறு காரணிகளால் உலக பொருளாதாரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிற சூழலில், நடப்பு நிதியாண்டிற்கான (2026-27) மத்திய பட்ஜெட் இந்திய பொருளா தாரத்தை உயர்த்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது என்கிறார்கள் பொருளாதார ஆய்வறிஞர்கள்.
மேலும், தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்க ளுக்கு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியிருப்ப தால் இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களும், புதிய அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டதற்கும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறார் நிர்மலா சீதாராமன் என்கிற விமர்சனங்களும் எதிரொலிக்கின்றன.
மத்திய பட்ஜெட்டை கடுமையாக எதிர்த் திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்,‘’"இந்த ஆண் டாவது, ஒன்றிய பா.ஜ.க. அரசின் கண்களுக்குத் தமிழ்நாடு தெரியும், அவர்களது காதுகளில் நமது உரிமைக்குரல் விழும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பைப் பொய்க்கச் செய்து, ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் நலன் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள் - பெண்கள் - விவசாயிகள் -விளிம்பு நிலை மக்கள் என எந்தப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கியத் திட்டங்கள் இடம்பெறவில்லை.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு முறையில், தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த் தப்பட வேண்டும் என்கிற தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கோரிக்கை, இந்த முறையும் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது.
இதன்மூலம் முதற்கட்ட மதிப்பீடுகளின்படி இதர ஒப்பிடத்தக்க மாநிலங்களைக் காட்டிலும் ஆண்டிற்கு சுமார் 5000 கோடி ரூபாய் நிதி இழப்பு தமிழ்நாட்டிற்கு ஏற்படும். கடந்த பல ஆண்டுகளாகவே நிதிப்பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், 16-ஆவது நிதிக்குழுவிலும் சரிசெய்யப்படவில்லை என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புச் சீரமைப்பில் மாநிலங்களுக்கான நிதி வருவாய் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான ஒன்றிய வரிகளின் பங்கு சுமார் 1,200 கோடி ரூபாய் அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்பதும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டிற்கான எந்த முக்கியத் திட்டங்களும் இடம்பெறவில்லை. மொத்தத்தில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்'' என்று விமர்சித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் தி.மு.க. குழு தலைவர் கனிமொழி எம்.பி., "மாநிலங்களுக்கு எதிராக இருக்கிறது இந்த பட்ஜெட். ஒன்றிய அரசின் நிதிக்குழுவின் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிந்தளிக்க வேண்டும் என்கிற அறிவுரையை நிதியமைச்சர் புறக்கணித்திருக்கிறார். நிதிக்குழுவின் பரிந்துரையையே ஏற்கவில்லையெனில் பிறகெதற்கு அந்த நிதி கமிஷன்? 50 சதவீதம் நிதிப் பகிர்வு இல் லாதது மாநிலங்களுக்குஇழைக்கப்படும் அநீதி.
ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நிறைய நிதி வரவேண்டிய நிலையில், அதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அந்த நிதியையும் இந்த பட்ஜெட்டில் குறைத்துள்ள னர். மாநிலங்களுக்கு எதிரான பட்ஜெட் இது. திருக்குறளை சொல்லி எப்போதும் தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கும் நிதி யமைச்சர், இந்த முறை திருக்குறளையும் புறக் கணித்திருக்கிறார். தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணிப்பது போல அவர்களை தமிழ்நாடும், சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிக்கும்'' என்கிறார்.
பொருளாதார அறிஞர்கள் சிலரிடம் விவாதித்தபோது,‘’"இந்த பட்ஜெட்டில் கவனிக்கத்தக்க வகையிலோ, கவர்ச்சிக்கரமான வகையிலோ எந்த அம்சமும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் இருப்பதாகத் தெரியவில்லை.
குறிப்பாக, உள் கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறைக்கு முக்கியத்துவம் தரப் பட்டிருப்பதாக நிதியமைச்சர் சொல்கிறார். ஆனால், எந்த வகையில் உற்பத்தித்துறையின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் உதவும் என்பதை அவர் பட்டியலிடவில்லை. உலக பொருளாதாரத் தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுவரும் சூழலில் உற்பத்தித்துறை மீது அதீத கவனம் செலுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த வலி யுறுத்தல்களுக்கேற்ப கவனம் செலுத்தப்படாததால், உற்பத்தித் துறையினர் கவலையடைந்துள்ளனர்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தித்துறை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த பட்ஜெட்டில் அது இல்லைங் கிறபோது ஏமாற்றமே வருகிறது. ஒரே ஒரு ஆறுதல், உள்கட்டமைப்பிற்கான நிதியை 11.20 லட்சம் கோடியாக தற்போது இருப்பதை 12.20 லட்சம் கோடி என 1 லட்சம் கோடி ரூபாய் இந்தமுறை உயர்த்தியிருப்பதுதான். மற்றபடி சுவாரஸ்யம் இல்லாத பட்ஜெட்''’என்கிறார்கள்.
தமிழக நிதித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "கடந்த 2025-26 நிதி ஆண்டில் ஜல்ஜீவன் குடிநீர்த் திட்டத்திற்காக 67 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தற்போது அறி விக்கப்பட்ட பட்ஜெட்டின் திருத்திய மதிப்பீட்டில் வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி யிருக்கிறார் நிதியமைச்சர். ஜல்ஜீவன் திட்டத்தை யே முழுவதுமாக முடக்குவதற்கான முயற்சி இது.
தாதுக்கள் நிறைந்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சுரங்கம் மற்றும் கனிமங்களை பிரித்தெடுத்தல், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை ஊக்குவித்தல் ஆகியவைகளுக்காக கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு, சாமானியர் களுக்கு பலனில்லை. மாறாக, மாநிலங்களிலுள்ள கனிம வளங்களை கார்ப்பரேட் மாஃபியாக்கள் சுரண்டுவதற்காகவும், கொள் ளையடிப்பதற்காகவும் மட் டுமே பலனளிக்கக் கூடியது. அதுமட்டுமல்ல, பிரதமரின் கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்காக கடந்த பட்ஜெட்டில் 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவ தாக அறிவித்துவிட்டு, தற்போது 11 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கியிருப்பதும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட 35,832 கோடி நிதி ஒதுக்கீட்டினை 32,500 கோடி ரூபாயாக குறைத்திருப்பதும், பிரதம மந்திரியின் இண்டேர்ன் ஷிப் திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட 10,831 கோடியை தற்போது திருத்திய மதிப்பீட்டில் வெறும் 526 கோடியாக குறைத்து ஒதுக்கீடு செய்திருப்பதும் ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்துவதுடன், இத்தகைய திட்டங்களெல்லாம் ஆரவாரத்திற்காக மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பதும் புலனாகிறது.
மேலும், தமிழ்நாட்டின் நலன் குறித்துப் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்பதுடன், தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு நடத்தி வருகிறது என்பதும் இந்த பட்ஜெட்டின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
மத்திய அரசின் பட்ஜெட் இந் திய பங்குச்சந்தையிலும் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தியது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தை இயங்குவதில்லை. ஆனால், நடப்பு நிதி யாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தை திறந்திருந்தது. பட் ஜெட்டை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு பரிவர்த்தனை வரியை 0.02 சதவீதத் திலிருந்து 0.05 சதவீதமாகவும், விருப்ப ஒப்பந்தங்கள் பிரிமீயங்களுக்கான வரியை 0.15 சதவீதமாகவும் உயர்த்தி அறிவித்தார். இந்த அறிவிப்பு முத லீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த உயர்வால், பங்குச் சந்தை கடுமையான அழுத்தத்தை சந்தித்தது. இதனால் மும்பை பங்குச் சந்தை 2370.36 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டது. நிஃப்டி 50 குறியீடும் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்தது.
இதுகுறித்து ஷேர் மார்க்கெட் டிங் நிபுணர்களிடம் பேசியபோது, "பங்கு பரிவர்த்தனை வரி என்பது, நாம் பங்குகளை வாங்கும்போதும், விற்கும்போதும் வரி விதிக்கப் படுவதைக் குறிக்கும். இந்த வரியை உயர்த்துவதால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவர். இதனால் பங்குச் சந்தை பெரும் சரிவை எதிர்கொள்ளும். தற்போது நிர்மலா சீதாராமன், இந்த வரியை உயர்த்திய சமயத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததால், சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்ததாக மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது''” என்கின்றனர்.
இதற்கிடையே, பா.ஜ.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் இந்த பட்ஜெட்டை ஆஹா, ஓஹோ என புகழ்ந்துகொண் டிருக்கின்றனர். ஆனால், சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார வளர்ச்சியும், பணப்புழக்கமும் அதிகரிக்க வழி வகுக்காத எந்த பட்ஜெட்டும் சிறந்த பட்ஜெட்டாக இருக்காது. அதைத்தான் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டும் உணர்த்துகிறது.
இறுதி சுற்று!
அன்புமணி கோரிக்கை! -நிராகரித்த நீதிமன்றம்!
அன்புமணிக்கு, மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்ய வேண் டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார் டாக்டர் ராமதாஸ்! இந்த வழக்கின் விசா ரணை, தலைமை நீதிபதியின் முதல் அமர்வில் திங்கள் கிழமை (2.2.2026) எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசா ரித்த நீதிபதிகள், "மூன்று வாரத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்த னர். இந்த வழக்கின் போது, "தங்களின் கருத்தையும் கேட்க வேண்டும்' என்று அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். "வழக்கில் எதிர் தரப்பாக இல்லாதபோது உங்களின் கருத்தை கேட்கத் தேவையில்லை' என்று சொல்லி அன்புமணி தரப்பின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
-இளையர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/budget-2026-02-02-15-33-59.jpg)